கண்ணாடி முன்னால் நின்று கைகளை உயர்த்தி மார்பகம் எப்படி அசைகிறது என்று பாருங்கள். கைகளை பக்கவாட்டில் நகர்த்தி தலையை உயர்த்தி இந்த சோதனையை செய்து பாருங்கள். உங்களுக்கு இயல்பான நிலை எது என்பதைத் தெரிந்து கொள்ள இது மிகவும் அவசியம். அதன் பிறகு இந்த அசைவுகளின் போது ஏதாவது அசௌகரியமாகத் தோன்றினால் ஏதோ பிரச்னை இருக்கிறது என்று அர்த்தம். மார்பகத்தின் வடிவத்தில் என்ன மாற்றம் தென்படுகிறது?எங்காவது வீக்கம் தெரிகிறதா?
தோலில் ஏதாவது மாற்றம் தெரிகிறதா?மார்புக்காம்பு உள்நோக்கி இழுத்துக் கொண்டது போலத் தெரிகிறதா என்பனவற்றையும் தெரிந்துகொள்ள பழகிக் கொள்ளுங்கள்.
உங்கள் மார்பகத்தை நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்ப்து மிகவும் முக்கியமானதுதான்.சிலருக்கு மாதவிலக்குக்கு முந்தைய நாட்களில் மார்பகங்கள் சற்று வலிப்பது போலத் தோன்றும். அதற்குப் பிறகு வலி குறைந்து பிறகு இல்லாமல் போய் விடும். மாதவிலக்கு சுழற்சியில் அவை எப்படியான மாற்றத்தை அடைகின்றன என்பதையும் நன்கு புரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் உங்கள் மார்பகத்தை சுயபரிசோதனை செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன.
1. மார்பகத்தின் வெளிச்சுற்று அல்லது வடிவத்தில் ஏதேனும் புதிதாகத் தென்படுகிறதா? கைகளை அசைக்கும் போது மடிப்புகள் அல்லது குழிவு போல் ஏதேனும் தென்படுகிறதா?
2. இரண்டு மார்பகங்களில் ஏதேனும் ஒன்றில் வலியோ, அசௌகரியமோதென்படுகிறதா? அந்த நிலை சில வாரங்களுக்குத் தொடர்ந்து நீடிக்கிறதா?
3. ஒரு மார்பகத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இல்லாத ஒரு அம்சம் இன்னொரு மார்பில் தென்படுகிறதா?
4. மார்புக் காம்பில் இருந்து ஏதாவது திரவக்கசிவு ஏற்படுகிறதா?
5. மார்புக் காம்பில் இருந்து ரத்தக் கசிவு அல்லது அதைச் சுற்றிய பகுதியில் ஏதேனும் சிவந்து தடித்து காணப்படுகிறதா?
6. மார்பு நுனியின் அமைப்பில் ஏதேனும் மாற்றம் தென்படுகிறதா? உள்பக்கமாக குழிந்தது போலவோ, வேறு திசையில் இழுத்துக் கொண்டு இருப்பது போலவோ தென்படுகிறதா?
இயல்புக்கு மாறாக புதிதாக எந்தவொரு மாற்றம் தென்பட்டாலும் அதனை உடனே மருத்துவரிடம் சொல்லி ஆலோசனை பெறுவது நல்லது.
மாதவிலக்கு தொடர்பான அறிவுரைகளைப் போலவே மார்பகம் தொடர்பான இத்தகைய அறிவுரைகளையும் பெண் குழந்தைகளுக்கு எடுத்துக் கூறுவது மிகவும் அவசியம்.பெண்கள் தாங்களே மாதாந்திர பரிசோதனை செய்து கொள்வது அவசியம். இதனால் வாழ்வின் பல்வேறு காலகட்டத்தில் மார்பில் ஏற்படும் மாற்றங்களை நன்கு புரிந்து கொண்டு பயமில்லாமல் வாழமுடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக