ஆனால், ஒருவரது பெற்றோர் இருவருக்கும் சர்க்கரை நோய் இருந்து, அவர் உடற்பயிற்சி செய்யாதவராகவும், அவரது உடல் அதிக பருமனாகவும் இருக்கும்பட்சத்தில், அவருக்கு நீரிழிவு நோய் வருவதற்கான மரபு காரணிகளும், சுற்றுப்புறக் காரணிகளும் அதிகபட்சமாக இருக்கும்போது அவர் சர்க்கரை அதிகம் சாப்பிடுவது கூடாது. மீறி அதிகமாக சாப்பிட்டால், அது அவரது உடல் எடையை அதிகரிக்கச் செய்துவிடும்.
அத்துடன், சர்க்கரை நோய் வருவதை ஊக்குவிக்கும் காரணியாக இந்தக் கூடுதல் சர்க்கரை அமைவதற்கான வாய்ப்புகள் அதிகம். சிலர், தங்களுக்கு சர்க்கரை நோய் இருப்பதாக சந்தேகிக்கலாம். அப்படிப்பட்ட நேரங்களில், சில அறிகுறிகளை வைத்தே அதை உறுதி செய்து கொள்ளலாம். அதிக தாகம், அதிக பசி, அதிக சோர்வு, திடீரென்று எடை குறைதல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், ஆறாத புண்கள் ஆகியவை சர்க்கரை நோயின் அறிகுறிகளாக கருதப்படுகின்றன. இப்படிப்பட்ட அறிகுறிகள் ஒருவருக்கு இருந்தால், அவர்கள் அவசியம் நீரிழிவுநோய் இருக்கிறதா என்பதை கண்டறியும் ரத்த பரிசோதனையை செய்து கொள்வது நல்லது.
ஆனால், இத்தகைய அறிகுறிகள் சர்க்கரை நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் அனைவருக்கும் உடனடியாக தெரிவதில்லை. நீரிழிவு நோய் தாக்கியவர்களில் சுமார் 50 சதவீதம் பேருக்கு இந்த அறிகுறிகள் வெளியில் தெரியாமலே இருந்து விடுகிறது. இப்படியான அறிகுறிகள் இல்லாத சர்க்கரை நோயாளிகளுக்கு அந்த நோயின் பாதிப்புகள் வெளியில் தெரியும்போது, அவர்களில் பலருக்கு பாதிப்புகள் கடுமையாக இருக்கும். இதை போக்க வேண்டுமானால், நீரிழிவுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிப்பது அவசியமாகிறது.
இதன் ஒருபகுதியாக, பெற்றோருக்கு நீரிழிவுநோய் இருந்தால் அவர்களின் பிள்ளைகளுக்கு 25 வயதாகும்போது அவர்கள் கண்டிப்பாக நீரிழிவுநோய் இருக்கிறதா என்று பரிசோதித்துக் கொள்வது நல்லது என்று சர்க்கரை நோய் நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். உங்களுக்கும் சர்க்கரை நோய் சந்தேகம் இருந்தால் இப்போதே பரிசோதனை செய்து உறுதி செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக