என்னை பின்பற்றுபவர்கள்

அன்பார்ந்த நண்பர்களே ! இந்த தளம்(website) தங்களுக்கு உதவியதாக நீங்கள் நினைத்தால் - Followers- மூலம் என்னை பின்தொடரவும்.. நன்றி
அழகாக இருக்க!- 12 வழிகள்!




1.யாருடனும் ஒப்பிடாதீர்கள். நீங்கள் தனித்தன்மையானவர் என்பது உண்மை. ஒவ்வொருவரும் தனித்தன்மையானவர்கள். ஒவ்வொருவர்களுக்கும் கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை, பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் ஒப்பிட்டுப் பார்ப்பதால் எந்தப்பயனும் இல்லை.

2.உங்கள் பழக்க வழக்கங்களை உயர்த்தி மெருகேற்றுங்கள். அன்பாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அன்பால் உங்கள் முகம் பிரகாசம் அடையும். அன்பே உங்கள் முகத்துக்கு அழகைத்தரும்.

3.உங்களைச் சுற்றி வசீகர அலைகளைப் பரப்பவேண்டுமா? சிரியுங்கள். உங்கள் நண்பர்களுடன் இருக்கும்போது உங்கள் சிரித்த முகம் அவர்களை உங்கள்பக்கம் திருப்பும். உங்கள் மன அழகு உங்கள் உடல் அழகை விஞ்சும். உங்களை வசீகரமானவர்களாக மாற்றும்.

4.உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளுங்கள். உடல் சுகாதாரமாக இருந்தால்தான் உற்சாகமாக இருக்கமுடியும். உடலில் பொங்கும் வலிமையும், சக்தியும் உங்களை சோர்வில்லாமல் இருக்க வைக்கும். சோர்வில்லாமல் உற்சாகமாக இருக்கும் உங்களை எல்லோருக்கும் பிடிக்கும்.

5.உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்கள் குழுவிலிருந்து உங்களைத் தனித்துக் காட்டும். பாட்டு, டான்ஸ் போன்றவற்றில் இருப்பவர்கள் ஈர்ப்பின் மையமாக இருப்பதைப் பார்க்கிறோம். முகம் அழகானவர்களை விட திறமைசாலிகள் கொடிகட்டிப்பற்ப்பதை நாம் காண்கிறோமல்லவா!

6.உங்களிடம் இருக்கும் திறமைகளை வளர்த்துக்கொண்டீர்கள். அது உங்களைச் சுற்றியுள்ளோருக்குத் தெரியவேண்டுமே!! கல்லூரியில் நுழையும் முதல் வருடத்திலேயே திறமையை வெளிப்படுத்துபவர்களைச் சுற்றி ஒரு நட்புக்குழுவே உருவாகுவதை எல்லோரும் கண்டிருப்போம். திறமைகளைப் பூட்டி வைக்க வேண்டாம். உங்கள் அறிவு, திறமை ஆகியவற்றை உலக அழகிப்போட்டியில் கூட சோதிப்பதைக் கண்டிருப்பீர்கள்!

7.நோகடிக்கும், பிறரைக் குறை சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். எல்லோரிடமும் குறையிருக்கும். இதைப் பெரிது படுத்தாதீர்கள். பெருந்தமையாக பாராட்டிப் பேசும் உள்ளத்தை எல்லோருக்கும் பிடிக்குமே!!

8.உன்னால் முடியாது என்று சொல்லும் நபர்களைக் கண்டுகொள்ளாதீர்கள். திறம்பட செய்யமுடியும் என்ற நம்பிக்கை எண்ணமே உங்களைத் தனித்தன்மையுடன் காட்டும்.

9.உங்கள் உள்ளேயே ஒரு குரல் அவநம்பிக்கையை ஏற்படுத்தும். ஒவ்வொரு சிறந்த செயல்பாட்டையும் அது தடுத்துவிடும். தள்ளிப்போடும். முடங்கிப்போய் இருப்பவர்கள் அழகாகக் காட்சியளிக்க முடியாது.

10.பொறாமையை விட்டுத்தள்ளுங்கள். பிறருடைய திறமை, பணம், புகழ் ஆகியவற்றைப் பார்த்துப் பொறாமைப் படுவதைவிட உங்கள் வாழ்வை, செயல்களைத் திருப்திகரமாகச் செய்து பாருங்கள். உங்கள் உள்ளத்திருப்தி உங்கள் முகப் பொலிவைக் கூட்டிவிடும்.

11.உங்களுக்கே உங்களைப் பிடிக்காமல் இருக்கலாம். உங்களிடம் உங்களுக்குப் பிடிக்காத பட்டியல் நிறைய இருக்கும். அதையெல்லாம் புறந்தள்ளுங்கள். உங்கள் முக அமைப்பையோ, நிறத்தை,உயரத்தைப் பற்றியெல்லாம் படும் கவலைகளை விட்டொழியுங்கள். உங்களை நீங்கள் விரும்புவதே உங்களை அழகாக்கும்.12.குறைந்த அளவான மேக்கப், பற்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், நகங்கள், பாதங்களை சீராக வைத்துக்கொள்ளுதல், உடையில் கவனமாக இருத்தல், உடலில் மெல்லிய நல்ல நறுமணம் வீசும் வண்ணம் இருத்தல் ஆகியவை பொதுவாக அழகு சேர்க்கும் என்பது உங்களுக்கே தெரியும்.

இளமைக்கு-திராட்சை

திராட்சை பற்றி கொஞ்சம் விரிவு ..
 
திராட்சையில் இருந்து தயாரிக்கப்படும் ஒயின் சிறந்த அழகு பொருளாக சருமத்திற்கு இளமை தரும் பொருளாக கருதப்படுகிறது. திராட்சை விதையில் உயர்தர பாலிஃபினால் உள்ளது. ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் காணப்படுகிறது. இது சருமத்தில் பாதிக்கப்பட்ட செல்களை உயிர்ப்பிக்கிறது. இதில் வைட்டமின் சி, இ, ஏ ( பீட்டா கரோட்டீன்) போன்றவை காணப்படுகின்றன. இது மூளையை சுறுசுறுப்பு ஆக்குவதோடு அனிச்சை செயலை உற்சாகப்படுத்துகிறது. கண், சருமம், மூளை ஆகியவற்றின் ஆரோக்கியத்தை தக்கவைக்கிறது. சருமம் விரைவில் முதுமை அடைவதை தடுக்கிறது.
பளிச் முகத்திற்கு
தினசரி 50 கிராம் முதல் 200 கிராம் வரை திராட்சை சாப்பிடுபவர்கள் என்றும் இளமையுடன் இருப்பார்கள் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
கருப்பு திராட்சை 25 கிராம் வாங்கி அதன் விதைகளை நீக்கி சாறு எடுத்துக் கொள்ளவும். முகத்தை நன்கு கழுவி துடைத்துவிட்டு பின் திராட்சை சாற்றை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊறவைத்து பின் நீர் கொண்டு கழுவி மென்மையான பருத்தி துண்டால் முகத்தை அழுத்தமின்றி துடைத்து வந்தால் முகம் பளிச்சென்று மாறும்.
வெண்மையான பற்கள்
திராட்சையில் உள்ள மாலிக் ஆசிட் சிறந்த ப்ளீச் போல செயல்படுகிறது. பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை போக்குவதோடு பளிச் வெண்மையை தருகிறது.
முகச்சுருக்கம் போக்கும்
திராட்சைப் பழம் முகச்சுருக்கத்தைப் போக்கும். திராட்சைப் பழத்தை நன்கு அரைத்து கூல் போல மாற்றவும். இதன் முகம், கழுத்து பகுதிகளில் பூசி ஊறவைக்கவும். நன்கு உலரவிட்டு குளிர்ந்த நீரில் கழுவலாம். இதனால் முகம் புத்துணர்ச்சியாகும். சுருக்கம் ஏற்படாது.
 

முடி உதிராமல் நன்கு வளர வேண்டுமா?




* வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.


* கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.
 
* வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும். நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.
 
* அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.


* ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தேய்த்து வந்தால் முடி உதிர்வதை தடுக்கலாம்.

உடல் எடை குறைய எதை செய்யக்கூடாது !!




உடல் பருமன் என்பது இன்றைக்கு அதிகம் பேசப்படக்கூடிய விசயமாக உள்ளது. எடை குறைப்பு விளம்பரங்கள் ஒரு பக்கம் காசை கறக்க போட்டி போட்டுக்கொண்டிருக்கையில் தாங்களாகவே எடையை குறைக்கிறேன் பேர்வழி என்று சிக்கலில் மாட்டிக்கொள்கின்றனர் பலர். உடல் எடையை குறைக்க என்ன செய்யலாம் என்பதை விட எதை செய்யக்கூடாது என்று கூறியுள்ளனர் உணவியல் வல்லுநர்கள்.


காலை உணவுக்கு கட் கூடாது
 
எடை குறைப்பு முயற்சிக்கு முதலில் செய்வது உணவை தவிர்ப்பது. அதுவும் பெரும்பாலோனோர் காலை உணவை கட் செய்துவிட்டு அலுவலகம் செல்கின்றனர். இது தவறான பழக்கம் என்கின்றனர் உணவியலாளர்கள்.


இரவில் உண்ட உணவு ஜீரணமாகி உடலானது சக்தியை எதிர்நோக்கி காத்திருக்கும் போது அதற்கு தேவையான ஆகாரத்தை அளிக்க வேண்டும். அப்பொழுதுதான் உடல் ஆரோக்கியமாக திகழும். எனவே காலை நேரத்தில் அதிக அளவில் உணவுகளை உண்ணாமல் ஜூஸ், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை உண்ணலாம். இதனால் சரிவிகித சக்தி கிடைக்கும்.


மாவுச்சத்து உணவுகள்
 
உடல் எடைக்கு மாவுச்சத்துள்ள உணவுகள்தான் எதிரி என்று நினைத்துக் கொண்டு அனைத்துவகையான கார்போஹைட்ரேட் உணவுகளையும் தவிர்த்து விடுவர். இது தவறானது என்கின்றனர் வல்லுநர்கள். ஏனெனில் கார்போ ஹைடிரேட்தான் நமது இயக்கத்திற்கு தேவையான சக்தியைத் தருகிறது. அதேசமயம் உடலுக்கு தீங்கு விளைக்கு விளைக்கும் சோடா, குளிர்பானங்கள் போன்றவைகளை தவிர்க்கலாம். அதேசமயம் புருக்கோலி, உருளைக்கிழங்கு, உள்ளிட்ட காய்கறிகள், மேலும் பழங்களில் உள்ள கார்போ ஹைட்ரேட் பொருட்களை சேர்த்துக்கொள்ளவேண்டும். மேலும் ஐஸ் கிரீம் உள்ளிட்டவைகளை உட்கொண்டால் உடல் எடைக் கூடும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள்.


ஜங்க் ஃபுட், நொறுக்குத்தீனி
 
உடல் எடையை குறைப்பதற்காக மாலை 6 மணிக்கு மேல் உணவைத் தவிர்ப்பவர்கள் பலர் உண்டு. அதேசமயம் தொலைக்காட்சி பார்க்கும் சாக்கிலோ, திரைப்படம் பார்க்கும் போதோ கிலோ கணக்கில் சிப்ஸ், பர்க்கர், உள்ளிட்ட ஜங்க் ஃபுட்களை உள்ளே தள்ளுவார்கள். இதுவும் உடல் நலத்திற்கு தீங்கானது என்கின்றனர் ஆய்வாளர்கள். சாதமாக உட்கொள்ள முடியாதவர்கள் காய்கறி சாலட்ஸ், பழங்கள் போன்றவைகளை உட்கொள்ளலாம் இது உடல் எடையை குறைக்கும்.


சரிவிகித கலோரி


அதிக கலோரி தரும் உணவுகளை தவிர்க்கிறேன் பேர்வலி என்று எதையாவது உண்ணக்கூடாது. பாதாம் பருப்பு, மூன்று ஆப்பிள் பழங்களை உண்ணும் போது கிடைக்கும் கலோரி சீஸ்பர்கரும், கோக் குடிப்பதன் மூலமும் ஏற்படும். எனவே எந்த விகிதத்தில் கலோரி உணவுகளை உட்கொள்கிறோம் என்பது முக்கியம் என்கின்றனர் உணவியலாளர்கள்.


எடைக் குறைப்பு சாதனங்கள்
 
உடல் எடையை குறைப்பதற்காக விற்பனை செய்யப்படும் சாதனங்கள், மாத்திரைகள் போன்றவைகளைப் பயன்படுத்தினால் உடல் எடை குறையும் என்பது அனைவரின் நம்பிக்கை. இந்த பொருட்கள் உடல் எடைக்குறைப்பிற்கு உதவி புரியுமே தவிர முழுவதுமாக அவற்றை மட்டுமே நம்பக்கூடாது என்கின்றனர் உணவியலாளர்கள். நமது உடலை கட்டுப்பாட்டிற்குள் வைக்க நாம் சரிவிகித சத்துள்ள உணவுகளை உட்கொண்டு உடல் எடையை குறைக்கலாம் என்பதே அவர்களின் அறிவுரை.

சருமம் பொலிவு பெற !!





சருமம் பொலிவு பெற ......
அழகு விஷயத்தில் பிரச்சினை இல்லாதவர்களே இல்லை.
அதற்காக விலை உயர்ந்த அழகு சாதனங்களை முகத்திலும், உடலிலும் வைத்து தேய்க்க வேண்டிய அவசியமில்லை.அன்றாடம் நம் வீட்டில் உபயோகப்படுத்தும் பொருட்களே அழகு சாதனப் பொருட்களாக பயன்படுகின்றன.

அழகாக்கும் தானிய உமி
கோதுமை, கேழ்வரகு போன்ற தானியங்களிலிருந்து நீக்கப்படும் உமி, தவிடு போன்றவை அழகிற்கு அழகூட்டும் பொருட்களாகப் பயன்படுகின்றன. வைட்டமின் ‘இ’ சத்து மிகுந்த இந்த தானியத்தின் தவிடுகள் முகத்திலுள்ள இறந்த செல்களை நீக்குவதோடு, முகச் சுருக்கங்களையும் நீக்குகின்றன. முகத்திற்கு இளமையும், பளபளப்பும் கூட்டுகின்றன. சருமத்திற்கு இதமளிப்பதால் சருமத்திற்கான அழகு சாதன கிரீம்களில் சேர்க்கப்படுகின்றன. வைட்டமின் இ சத்து சருமத்திற்கு மிகவும் அத்தியாவசியமானது. தினசரி உணவில் சிறிதளவு கோதுமையை சேர்த்துக்கொண்டால் சருமம் பளபளப்பாகும்.

ஆலிவ், தேங்காய் எண்ணெய்

ஆலிவ் ஆயிலை முகத்தில், கை, கால்களில் பூசி வர சருமம் பள பளப்பாகும். தேங்காய் எண்ணெயும், பொலிவிற்கு ஏற்றது. அடிக்கடி சில மணி நேர இடைவெளியில் குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவி வர முகம் புத்துணர்சியுடன் திகழும். ஆலிவ் எண்ணெயுடன், முட்டை வெள்ளைக் கரு,எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் மாஸ்க் போல போடவும். பத்து நிமிடம் கழித்து முகம் கழுவினால் முகம் பளிச் தோற்றம் தரும்.

கேரட், பீட்ரூட் மற்றும் செலரி ஆகியவைகளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள முகம் இளமைப் பொலிவுடன் திகழும் முதுமைத் தோற்றம் எட்டிப்பார்க்காது.

விளக்கெண்ணெய் மகத்துவம்
இரவு நேரங்களில் முகம் , கை, கால் முட்டிகளில் விளக்கெண்ணெய் தடவிவைத்து காலையில் வெது வெதுப்பான நீரில் குளிக்க வறண்ட தன்மை நீங்கும். சருமம் மென்மையாகும்.

தேன், வாழைப்பழம்

குளிர் காலமோ, கோடை காலமோ சருமத்தில் பளிச் தோற்றத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும். இதற்கு வாழைப்பழத்தை நன்கு மசித்து அதில் தேன் கலந்து முகம், கை, கால்களில் பூசி ஊறவைக்கவும். 15 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவினால் சருமம் பொலிவு தரும்.

பளிச் பற்கள்

சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் சாதாரண உப்பு அயோடின் சத்து மிகுந்தது. இது எலும்பு வளர்ச்சிக்கு உறுதுணை புரிகின்றது. சிறிது உப்பு கலந்த நீர் கால்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். உப்பு கலந்த நீரால் கண்களைக் கழுவ கண்கள் பளபளப்பாகும். கண்களுக்குக் கீழே தோன்றும் பை போன்ற வீக்கத்தைக் குறைக்கும். எலுமிச்சை சாறுடன் உப்பு கலந்து பற்களில் தேய்த்து வர மஞ்சள் தன்மை மறைந்து பற்கள் பளிச் தோற்றம் தரும்.

எண்ணெய் பசை நீக்கும்

இது ஒரு வகை மென்மையான, களிமண் வகையைச் சேர்ந்த மண். இது சருமத்திலுள்ள அதிகப்படியான எண்ணெய்ச் சத்தை உறிஞ்சும் தன்மை கொண்டது. எனவே அதிக எண்ணெய்ப் பசை கொண்ட சருமத்திற்கும், கேசத்திற்கும் இம்மண் பவுடர், அழுக்கு நீக்கியாகவும், அதிக எண்ணெய்ப் பசையை நீக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இது சருமத்திற்கு புத்துணர்ச்சியும், கண்களுக்கு குளிர்ச்சியும் தரக் கூடியது. கேசத்தினையும் சுத்தப்படுத்தக்கூடியது. எனினும் அதிகப்படியான தொடர்ச்சியான பயன்பாட்டினால் சரும வறட்சி ஏற்படும். இதிலுள்ள தாது உப்புகள், வைட்டமின்கள் சருமத்திற்கு ஊட்டத்தையும் இளமையையும் தருகிறது.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. இதனை வட்டமாக நறுக்கி கண்களின் மீது வைத்தால் கண்களுக்கு புத்துணர்ச்சி ஏற்படும், கருவளையம் நீங்கும். இதேபோல் உருளைக் கிழங்களை வட்டமாக நறுக்கி முகத்தில் தேய்க்க கரும்புள்ளிகள் நீங்கும், கருவளையம் போகும். துளசி இலை, கற்பூரம் ஆகியவற்றை அரைத்து, முகத்தில் பூசலாம். புதினாவை அரைத்து, அத்துடன் அரை மூடி எலுமிச்சை பழச் சாறு கலந்து முகத்தில் பூச, முகம் பொலிவடையும்.

முதலில் அழகு என்பது மனசை பொறுத்ததுதான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மனம் நன்றாக இருந்தால் புன்னகை முகத்தோடு அனைவரையும் வசீகரிக்கும் முகமாக அழகாக மாறிவிடும். அழகுக்கு எதிராக இருப்பது மன அழுத்தம் மட்டுமே எனவே மன அழுத்தம் ஏற்படாமல் தவிர்க்க வேண்டும். அனைத்தையும் விட முக்கியமானது தினசரி சராசரியாக 7 மணி நேரம் தூங்குவது உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்ச்சி கிடைக்கும் முகம் அழகாகும்.

பொடுகா? கவலையை விடுங்க!

இன்று இளைஞர்களை எரிச்சல்படுத்தும் பிரச்சினைகளில் பொடுகு முக்கியமானது. தலையின் பொலிவை குறைத்து எண்ணெய் வழிந்தால் போல் அசிங்கம் ஆகிவிடும். ஒரு நாள் தலைக்கு குளிக்காவிடினும் துர்நாற்றம் வீசத்தொடங்கிவிடும்.
இதற்கு எளிய தீர்வு உள்ளது… பொடுகை துரத்திவிடலாம்.
இரண்டு தேக்கரண்டி வெந்தயத்தை இரவு தண்ணீரில் ஊறப் போடவும். காலையில் அந்த வெந்தயத்தை அரைத்துத் தலையில் தேய்த்து அரைமணிநேரம் வைக்கவும்.
பின் சீயக்காய்த் தேய்த்துக் கழுவிவிடவும். கடைசியாகத் தண்ணீர்விட்டுக் கழுவும்போது எலுமிச்சம்பழச் சாற்றைச் சேர்க்கவும். வாரத்திற்கு இரண்டு முறைப் பச்சைப்பயிற்று மாவைத் தயிரில் கலந்து தலைக்குக் குளித்துவிடவும்.பொடுகு மறைந்துவிடும்.

உடலை ஸ்லிம் ஆக்கும் இந்திய உணவுகள்

மஞ்சள்
இந்திய உணவுகளில் மஞ்சளுக்கு தனி மகத்துவம் உண்டு. மருத்துவ குணம் நிறைந்த மஞ்சள் கொழுப்பு சத்தை குறைக்க வல்லது. கெட்ட கொழுப்பினை குறைத்து உடல் பருமனில் இருந்து உடலை பாதுகாக்கிறது. இதனால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட மஞ்சள் கொழுப்பு சக்தியை குறைப்பதில் முக்கிய பங்குவகிக்கிறது. இதனால் இதயநோய் ஏற்படாமல் பாதுகாக்கப்படுகிறது.
கொத்தமல்லி
உடலின் கொழுப்பை குறைப்பதில் கொத்தமல்லிக்கு சிறந்த பங்கு உண்டு. உண்ட உணவை ஜீரணப்பதில் கொத்தமல்லி சிறந்த மூலிகையாக செயல்படுகிறது. உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகளை எரித்து உடலை ஸ்லிம் ஆக்குகிறது.
கறிவேப்பிலை
உடலின் கொழுப்பை குறைப்பதில் கறிவேப்பிலை முக்கிய பங்கு வகிக்கிறது. கறிவேப்பிலையில் டாக்ஸின்கள் உள்ளன. தினமும் 8 முதல் 10 கறிவேப்பிலைகளை உட்கொண்டால் கொழுப்பு படிப்படியாக குறையும். மோர், காய்கறி சாலட், போன்றவைகளில் தினமும் சேர்த்துக்கொள்ளலாம்.
வெள்ளைப்பூண்டு
கொழுப்பை எரிப்பதில் வெள்ளைப்பூண்டுக்கு முக்கிய பங்குண்டு. இது கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை கொண்டது. எனவே இது உடலின் கொழுப்பை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
கடுகு எண்ணெய்
சமையல் எண்ணெயானது உடலில் கொழுப்பு சேருவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே குறைப்பு கொழுப்பு அமிலங்கள் உள்ள எண்ணெய்களை பயன்படுத்த வேண்டும். கடுகு எண்ணெயில் ஆண்டி ஆக்ஸிடென்ஸ்,வைட்டமின்கள் போன்றவை காணப்படுகின்றன. இது இதயத்திற்கு இதமானது.
முட்டைக்கோஸ்
உடல் கொழுப்பை கட்டுப்படுத்தும் உணவுகளில் முட்டைக்கோஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. உடல் குறைப்பில் சாலட் வகைகளில் முட்டைக்கோஸ் பயன்படுத்தப்படுகிறது. முட்டைக்கோஸ் உடலில் கொழுப்பு, சர்கரை போன்றவற்றை சரிசமமாக தக்கவைக்கிறது.
பாசிப்பருப்பு
பாசிப்பருப்பில் ஏ,பி,சி, மற்றும் ஈ வைட்டமின்கள் உள்ளன. இதில் கால்சியம், இரும்பு, பொட்டாசியம், உள்ளிட்ட தாது உப்புகள் உள்ளன. இது குறைந்த கொழுப்பு சத்துள்ள உணவு. உணவியல் நிபுணர்கள் உடல்குறைப்பு தொடர்பான உணவாக பாசிப்பருப்பினை பரிந்துரைக்கின்றனர். இது உயர் ரகமான நார்ச்சத்து கொண்டுள்ளது. உடலில் ரத்த அழுத்தம் ஏற்படுவதில் இருந்து பாதுகாக்கிறது.
தேன்
உடல்பருமனை குறைப்பதில் தேனின் பங்கு முக்கியம்மானது. தினமும் காலை நேரத்தில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்தால் உடல் பருமன் குறையும்.
மோர்

உடலுக்கு தேர்வையான நீர் சத்தை அளித்து, கொழுப்பை குறைப்பதில் மோர் முக்கிய பங்கு வகிக்கிறது. தேவையான கலோரிகளை மட்டுமே அளிக்கும் தன்மையுடையது என்பதால் தேவையற்ற கொழுப்பை உடலில் தங்கவிடாது.
சிறு தானியங்கள்
நார்ச்சத்து நிறைந்த கம்பு, சோளம், ராகி, தினை போன்றவை உடம்பில் கொழுப்பை ஏற விடாது. விலைகுறைவானதும் சத்து நிறைந்த்துமான இந்த தானிய உணவுகளையே பண்டைய காலத்தில் உணவாக உட்கொண்டனர்.
பட்டை, கிராம்பு
கறி சமையலுக்கு வாசனைக்காக பயன்படுத்தப்படும் பட்டை, கிராம்பு போன்றவை கொழுப்புச்சத்தை குறைக்க வல்லது. கெட்ட கொழுப்பினை உடம்பில் தங்கவிடாமல் செய்து, டைப் 2 நீரிழிவினை கட்டுப்படுத்துகிறது.

தூக்கமின்மையால் பிரச்சனையா?



இரவுத் தூக்கம் நிம்மதியாக இருந்தால் உடலில் வேறெந்த பெரிய நோயும் இல்லை என்று தெரிந்து கொள்ளலாம்.
தூக்கமின்மையை சாதாரணமாகக் கருதி கண்டுகொள்ளாமல் விடுவது தவறு என்கிறார்கள் மருத்துவர்கள்.
சிறு வயதினருக்கு தேர்வு பயம், தலைவலி உள்ளிட்ட சிறிய தொந்தரவுகளினால்கூட தூக்கம் தடைபடலாம்.
அது விரைவில் சரியாகி விடும்.
30 வயதுக்கு மேல் ஆண், பெண் இருவருக்குமே தூக்கமின்மை பிரச்னை துவங்குகிறது.
 உடலில் ஏற்கனவே இருக்கும் சர்க்கரை, ரத்தஅழுத்தம்,
சிகிச்சை பெற்று வருபவர்கள், அடிக்கடி தலைவலி பிரச்னை உள்ளவர்கள், கேன்சர் போன்ற நோய்களுக்கு ரேடியோ தெரபி
மற்றும் கீமோதெரபி சிகிச்சை
மேற்கொள்ளும் நபர்கள் தூக்கமின்மை பிரச்னையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
அதிக உடல் எடை காரணமாகவும் தூக்கம் தடைபடும்.
பகல் நேரத்தில் தூங்கும் பழக்கம் உள்ளவர்களுக்கும்
உறக்கம் பிரச்னையே. இரவில் நீண்ட நேரம் டிவி,
 கம்ப்யூட்டர் பார்ப்பது மற்றும் மனக்குழப்பம்,
மனஅழுத்தம் உள்ளிட்ட
உளவியல் சிக்கல் இருந்தாலும் தூக்கம் பிரச்னையாக மாறும்.
தூக்கமின்மையின் காரணமாக எந்த விஷயத்திலும்
இவர்களால் முழு ஈடுபாடு காட்ட முடியாது.
கவனக்குறைவால் மற்ற வேலைகளும் கெடும்.
தூக்கம் தடைபட்டு அடிக்கடி
எழுந்திருத்தல் போன்ற தொல்லைகள் தொடரும்.
 இதனால் உடல் சோர்வு,
தெளிவாக முடிவெடுக்கத் தெரியாமல் திண்டாடுதல்,
உடல் தளர்ச்சி, யோசிக்க முடியாமல் திணறுதல்
போன்ற பிரச்னைகளுக்கு ஆளாவார்கள்.
தூக்கமின்மை துவங்கும் போதே மருத்துவரை அணுகி சிகிச்சை செய்து கொள்ளலாம்.
மூளையில் சுரக்கும் செரோட்டின் அளவு குறையும் போது தான்
 தூக்கமின்மை பிரச்னை உருவாகிறது. குழந்தைகளுக்கு
சிறு வயதில் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம்,
குழந்தைகள் பயங்கரமான
 கனவுகளால் விழிக்க வாய்ப்புள்ளது. அவர்களுக்கு
கனவு பற்றி சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
மரபு ரீதியான இரவு நேர பய உணர்வும் தூக்கத்தின் எதிரியே.
தூக்கத்தில் எழுந்து நடப்பது,
தானாகப் பேசுவது போன்ற
குறைபாடுகளும் குழந்தைகளிடம் காணப்படலாம்.
இது குறித்து மருத்துவரிடம்
ஆலோசித்து சிகிச்சை எடுத்துக் கொள்வதன்
 மூலம் குழந்தைகள் நிம்மதியான தூக்கம் பெற முடியும்.

கொழுப்பு உணவை கொஞ்சம் குறைங்க



அமிர்தம் கூட அளவுக்கு மிஞ்சின நஞ்சினு சொல்லுவாங்க
சாப்பிடுங்க பசிக்கு கொஞ்சம் , ருசிக்கு கொஞ்சம் ..
உடல் எடையை குறைக்க வேண்டும் என்று டயட்டில் இருப்பவர்கள் வீட்டில் அதற்கேற்ப உணவுகள் உட்கொள்கின்றனர். அதேசமயம் விருந்து, விழாக்களுக்கு செல்லும் அவர்கள் அங்குள்ள உணவுகள், ஐஸ்கிரீம், சாக்லேட் என ஒரு பிடி பிடிக்கின்றனர். இதனால் உடல் எடை கட்டுக்குள் வராமல் போகிறது. உண்மையிலேயே உடல் எடை குறைக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் வாயைக் கட்டுப்படுத்தினாலே எடை தானாக குறையும் என்று கூறியுள்ளனர். அவர்களின் ஆலோசனையை பின்பற்றுங்களேன்.

கொழுப்பு உணவுகள்

உங்களுக்கு எதை உண்ணப் பிடிக்குமோ, அதைத் தவிருங்கள். இது கொஞ்சம் கஷ்டம்தான். முதல் நான்கு நாட்கள் மிக கடினம் போல தோன்றும். முழுமையாகத் தவிர்க்க முடியாவிடினும், சிறிது சிறிதாகத் தவிர்க்கப் பாருங்கள். முழுமையாகத் தவிர்த்தபின் உங்கள் ஆர்வம் குறையத் தொடங்கியிருப்பதை நீங்களே உணர்வீர்கள்!. கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்ணும் முன் உங்கள் எடையையும் உடலையும் ஒருமுறை நினைத்துப் பாருங்கள். கொழுப்பு நீக்கப்பட்ட பாலை உபயோகிக்கவும்.

தியானத்தால் திசை திருப்பலாம்

தீனி உண்ணும் எண்ணம் பத்து நிமிடங்களுக்கு மேல் நீடிக்காது. எனவே அந்த பத்து நிமிடங்கள் உங்கள் மனத்தை பாட்டு கேட்பதன்மூலமோ, உடற்பயிற்சி செய்வதன் மூலமோ அல்லது தியானம் மூலமோ திசை திருப்பலாம். எப்போதும் வாய் சுத்தமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். தேவையெனில் மவுத்வாஷ் உபயோகிக்கலாம். வாய் - சுத்தமாக இருக்கும்போது, கண்டதை உண்ணும் எண்ணம் தோன்றாது.

உடல் தளர்ச்சியின்போது உண்ணும் எண்ணம் தோன்றலாம். அச் சமயங்களில் கதவை அடைத்து, கண்களை மூடி ரிலாக்ஸ் செய்யுங்கள். குறிப்பாக சமையலறை பக்கம் போகாமல் ஏதாவது வேலைகளில் ஈடுபடலாம்!.

மூச்சுப் பயிற்சி

மூச்சுப் பயிற்சி செய்வதன்மூலம் மன இறுக்கத்தைப் போக்கலாம். மன இறுக்கம்கூட அதிகப்படியான உணவு உண்பதற்கு ஒரு காரணம். மன அழுத்தம்கூட உடல் எடை கூட காரணமாகலாம். உடற்பயிற்சியின்போது சுரக்கும் எண்டோர்ஃபின் என்னும் ஹார்மோன் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகின்றது. மேலும் டிரிப்போஃபேன் என்னும் அமினோ அமிலம் நிறைந்த சோயா மற்றும் பால் பொருட்களும் மன அழுத்தத்தைக் குறைக்கும்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சியின் அவசியத்தைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. உடலின் ஆரோக்கியத்திற்கும், இளமைக்கும் உடற்பயிற்சி தேவையான ஒன்று. இதற்கென தனியே நேரம் செலவிட இயலாவிடினும் வீட்டுவேலை, படியேறுதல் மற்றும் தோட்டக்கலை போன்றவற்றில் நம்மை ஈடுபடுத்திக் கொள்வதே, சிறந்த உடற்பயிற்சியாகும். இவை உடலின் எண்ணற்ற கலோரிகளை குறைக்கின்றன.

எண்ணத்தை மாற்றுங்கள்

உலர் பருப்புகள் உடலுக்கு நல்லதல்ல என்ற தவறான எண்ணம் உண்டு. தினமும் சிறிதளவு உலர் பருப்புகள் எடுத்துக் கொள்வது உடல் எடையைக் குறைக்கும் என்பது ஆய்வில் நிரூபணமாகியுள்ளது. எனவே தினசரி 25 கிராம் நட்ஸ் (பாதாம், நிலக்கடலை, வால்நட் மற்றும்) இரண்டு தம்ளர் தண்ணீர் சாப்பிடலாம். இருபது நிமிடங்களில் தீனி உண்ணும் உங்கள் எண்ணத்தை மாற்றிவிடும். பசிக்கும் போதெல்லாம், பப்பாளி, வெள்ளரிக்காய், தக்காளி போன்றவற்றை சலாட் செய்து சாப்பிட்டு, ஒரு தம்ளர் வெதுவெதுப்பான நீர் குடித்து வந்தால் நாளடைவில் உடல் எடை குறையும்.

விருந்து உணவுகள்

திருமணம், பிறந்தநாள் போன்ற விருந்துகளைக் கட்டாயம் தவிர்க்கவும். ஒரு வேளை, மிக அவசியமான விருந்து நிகழ்ச்சி என்றால், காய்கறி, கீரை சூப் என பாதி வயிறு சாப்பிட்டு விட்டு செல்லுங்கள். இதனால் ஐஸ்க்ரீம், ஸ்வீட்ஸ் என கண்டபடி சாப்பிடத் தோன்றாது. எனவே மனதளவில் உணவுகளை கட்டுப்படுத்தினாலே உடல் எடை தானாக குறையும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள்.

தொப்பையை குறைக்க


இன்றைய காலத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் மற்றும் தொப்பை பிரச்சனை.
அடிவயிற்றில் அதிகமாக சதைப்பிடிப்பு இருந்தால் உடல் அழகே கெட்டுவிடும். அதைச் சரிசெய்யவும், வலுவானதாக்கவும், கொஞ்சம் பயிற்சிகளை மேற்கொள்வதுதான் சிறந்த வழி.
வயிற்றுப் பகுதியை வலுவாக்க பிசியோதெரபிஸ்ட்டுகள், பிட்னெஸ் பயிற்சியாளர்களிடம் கேட்டு, அவர்கள் ஆலோசனைப் படி, பயிற்சி மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.
உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு ஆகியவற்றை நிச்சயம் கடைபிடிக்க வேண்டும். அளவான உடற்பயிற்சி உடல் பருமனைக் கட்டுப்படுத்துவதோடு, ஆயுள்காலத்தையும் அதிகரிக்கிறது.
உடல் எடையை குறைக்க…
தினமும் ஐந்து கப் காய்கறி அல்லது பழம் சாப்பிட வேண்டும். கீரை வகைகள், பீன்ஸ், அவரை போன்ற காய்கறிகளையும், புடலங்காய், பூசணி போன்ற கொடிவகைக் காய்கறிகளையும் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.
சீசனல் பழங்கள் எல்லாம் சாப்பிடலாம். ஆனால், மாம்பழம், பலாப்பழம், கிழங்கு வகைகள் போன்றவற்றை குறைந்த அளவு எடுத்துக் கொள்வது நல்லது.
பப்பாளிக் காயை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்ல பலன் தரும். முள்ளங்கியை உணவில் அதிகமாக எடுத்துக் கொள்வது சிறந்தது.
வாழைத்தண்டு, பூசணி, அருகம்புல் போன்றவற்றில் ஏதேனும் ஒரு சாற்றினை குடித்து வர உடல் எடை குறையும். உடல் அழகு பெறும்.
இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிட, 40 நாட்களில் தொப்பை குறையும்.
இந்த உணவு முறைகளுடன், பிசியோதெரபிஸ்ட் மற்றும் பிட்னஸ் பயிற்சியாளர்களிடம் தகுந்த ஆலோசனை பெற்று, பின்பற்றினால் தொப்பை தொல்லையின்றி வாழலாம்.

மஞ்சள்காமாலை தடுக்கும் வழிமுறை





சரியான நேரத்தில் கண்டுபிடித்து முறையான சிகிச்சை செய்து எடுக்காவிட்டால் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் நோய் மஞ்சள் காமாலை.கல்லீரலில் ஏற்படும் வைரஸ் தொற்று தான் இந்த நோய் ஏற்பட காரணம். கல்லீரல் அழற்சி வைரஸ் ஏ என்ற வைரசின் தாக்குவதினால் மட்டுமே இந்நோய் ஏற்படுகிறது. இந்த வைரஸ் கல்லீரலை தாக்கி மஞ்சள்காமாலையை உருவாக்குகிறது. இது குழந்தைகள் மற்றும் சிறுவர்களை எளிதில் தாக்கும்.
சுகாதாரமற்ற குடிநீர், உணவின் வழியாக இந்த வைரஸ் ஒருவரது உடலுக்குள் நுழைந்து விடுகிறது. ரத்தம் செலுத்தும் போது அல்லது உடலுறவின் போதுகூட இது பரவ வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த வைரஸ் உடலுக்குள் நுழைந்த ஒன்று அல்லது இரண்டாவது வாரத்தில் மஞ்சள் காமாலை தோன்றுகிறது.

நோய்த் தொற்று ஏற்பட்டவர்களுக்கு காய்ச்சல், உடல் அசதி, பசியின்மை, உடல் வலி, சோர்வு, மூட்டுவலி போன்ற அறிகுறிகள் தென்படும்.
கண்களின் வெள்ளைப் பகுதி மஞ்சளாக காட்சியளிக்கும். சிறுநீரும் மஞ்சள் நிறத்தில் வெளியாகும். மேலும் சிறுநீர் வெளியேற்றுவதிலும் சிரமங்கள் தோன்றும். கல்லீரல் அழற்சியின் அடுத்தகட்டமாக கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீங்கி பெரிதாகும். இத்துடன் நிணநீர்க் கட்டிகளிலும் வீக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ரத்தப் பரிசோதனையின் மூலமே மஞ்சள் காமாலை நோயை உண்டாக்கும் வைரஸ் பற்றி கண்டறிய முடியும். இந்த வைரசுக்கு எதிரான எதிர்ப்பாற்றல், புரதத்தின் அளவு ரத்தத்தில் அதிகரித்திருப்பதை வைத்து மஞ்சள் காமாலை நோயின் தாக்கத்தை அறியலாம். மேலும் கல்லீரலில் முக்கிய என்சைமின் அளவும் அதிகரித்து காணப்படும்.
ரத்தம், சிறுநீர் பரிசோதனைக்கு அடுத்தபடியாக வயிற்றுப் பகுதியில் ஸ்கேன் செய்து பார்ப்பார்கள். அப்போது இந்த நோய் பாதிப்பினால் ஏற்பட்ட கல்லீரல் வீக்கம் மற்றும் மண்ணீரல் பாதிப்புகளை அறிந்து கொள்ளலாம்.
சிகிச்சை: உடனடியாக முறையான சிகிச்சை எடுப்பதோடு பத்தியமும் இருக்க வேண்டும். உணவுக் கட்டுப்பாட்டை நோய் முழுமையாக குணமடையும் வரை கடைபிடிக்க வேண்டும். கல்லீரல் அழற்சி நீண்ட காலம் இருந்தால் அது கல்லீரல் புற்றுநோயாக மாறவும் வாய்ப்பு உள்ளது. மேலும் கல்லீரல் செயல் இழப்பும் ஏற்படலாம்.

கர்ப்பிணிகளுக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்படும் போது கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகிறது. கர்ப்பிணிகளுக்கு கல்லீரல் அழற்சி பி வைரசால் பாதிப்பு இருக்கும் பட்சத்தில் பிறக்கும் குழந்தைக்கும் தடுப்பூசி போட வேண்டியது முக்கியம்.
இதற்காக வைரசுக்கு எதிரான தடுப்பாற்றல் புரதமும் குழந்தைக்கு கொடுக்கப்பட வேண்டும். இதன் மூலம் மட்டுமே பிறக்கும் குழந்தைக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்படுவதைத் தடுக்க முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.