நம்மில் பலர் அடிக்கடி கண்ணாடியை பார்த்து தலையை வாருவதே வழக்கமாக போய்டுது. அதிலும் ஆண்கள் சிலர் சட்டை பையுக்குள்ளேயே சீப்பை வைத்து அடிக்கடி எடுத்து தலையை வாருவார்கள்........
இதனால் முடி வளருமா? உதிருமா?
இதனால் முடி வளருமா? உதிருமா?
தலையில் சராசரியாக அதிகபட்சம் ஒரு லட்சம் தலைமுடிகள் இருக்கின்றன. அவற்றில் அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப, தினமும் ஏறக்குறைய 100 முடிகள் உதிர்கின்றன. தலைமுடியை பராமரிப்பதில் கவனம் செலுத்த வேண்டுமே ஒழிய, பாப் வெட்டிக்கொள்வது, ரசாயன ஷாம்பு, கலரிங் செய்வது போன்றவற்றில் அதிகமாக கவனம் செலுத்தக்கூடாது. அப்படி செய்தால், நாற்பது வயதுக்கு பின், அதன் சாயம் வெளுத்துவிடும்.

மிதமான நீரில் தான் குளிக்க வேண்டும்; அதிக வெந்நீர் தலைமுடிக்கு ஆகாது. முடிகளில் தண்ணீர் விட்டு சுத்தம் செய்யும் போது, மிகவும் இதமாக கையாள வேண்டும். தலைமுடி என்பது, `எலாஸ்டிக்' தன்மையுள்ளது; மிகவும் மிருதுவானது.லேசாக இழுத்தால் கூட அறுந்துவிடும். அதனால் வாரும் போதும், சிக்கெடுக்கும் போதும் மிகவும் நிதானமாக கையாள வேண்டும்.
விலை மலிவானது, புதிதாக வந்தது என்று சில காரணங்களால், அடிக்கடி ஷாம்புவை மாற்றக்கூடாது. அப்படி மாற்றினால், அது தான் தலைமுடிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். தலைமுடியில் ஷாம்புவை பயன் படுத்தும் போது, உச்சந்தலையில் ஆரம்பித்து, நிதானமாக நுனி முடிகள் வரை தடவி, சுத்தம் செய்ய வேண்டும். நரை முடி ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. மன அழுத்தம் அதிகரித்தால் திடீரென சிலருக்கு நரைமுடி வளர ஆரம்பிக்கும். நரைமுடி எதனால் ஏற்படுகிறது என்பது இதுவரை மர்மமானது. எந்த நிபுணரும், இதனால் தான் நரை வருகிறது என்று உறுதியாக சொல்லவில்லை.
தலைமுடி கருகருவென வளரக்காரணம் உடலில் உள்ள மெலனின் என்ற சுரப்பி தான். மயிர்க்கால்களில் மெலனின் இருப்பதால் கருமையான முடி வளர்கிறது. அந்த சுரப்பி சுரப்பது குறைய ஆரம்பித்தால், வெள்ளையாக வளர்கிறது. நரை முடியை கருமுடியாக வளர வைக்க மேற்கொண்ட ஆராய்ச்சிகள் இதுவரை பலன் அளிக்கவில்லை. நரை முடியை மறைக்க ஒரே வழி "கலரிங்' செய்வது தான்.
தரமான "ஹேர் டை' வாங்கி பயன் படுத்துவதை விட, விலை மலிவான பொருட்களை தேடுவோர் அதிகரித்து விட்டனர். இதனால், பாதிப்பு தலைமுடிக்குத்தான் என்பதை அவர்கள் உணர வேண்டும். தரக்குறைவான "ஹேர் டை'யில், `பாரா பெனிலின் டயாமின்' என்ற (பி.பி.டி.,) ரசாயனம் உட்பட சில ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன. இதனால் சிலருக்கு அலர்ஜி ஏற்படுகிறது.
மருதாணி தான் `ஹென்னா' என்பது. மருதோன்றிச்செடி இலைகளில் உள்ள சிவப்பு சாயம் தான் மருதாணியாக பயன்படுகிறது. காயவைத்து, அதை பேஸ்ட்டாக பயன்படுத்துவதும் உண்டு. முன்பெல்லாம் வீட்டிலேயே தயாரிப்பதுண்டு. இப்போது கடைகளில் பாக்கெட்டாக விற்கப்படுகிறது. பாக்கெட் `ஹென்னா'வில் கலப்படம் காணப்படுகிறது. இயற்கையான மருதாணியை ஓரளவு கலந்து, பெரும்பாலும் பி.பி.டி.,தான் பயன்படுத்தப்படுகிறது. இயற்கையான மருதாணியை பயன்படுத்தினால் கையில் சிவப்பேற சில மணி நேரம் ஆகும். ஆனால், பாக்கெட் `ஹென்னா' பயன்படுத்தினால் சீக்கிரம் பலன் தரும். ஆனால், அது கெடுதலானது.
