என்னை பின்பற்றுபவர்கள்

அன்பார்ந்த நண்பர்களே ! இந்த தளம்(website) தங்களுக்கு உதவியதாக நீங்கள் நினைத்தால் - Followers- மூலம் என்னை பின்தொடரவும்.. நன்றி
அழகாக இருக்க!- 12 வழிகள்!




1.யாருடனும் ஒப்பிடாதீர்கள். நீங்கள் தனித்தன்மையானவர் என்பது உண்மை. ஒவ்வொருவரும் தனித்தன்மையானவர்கள். ஒவ்வொருவர்களுக்கும் கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை, பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் ஒப்பிட்டுப் பார்ப்பதால் எந்தப்பயனும் இல்லை.

2.உங்கள் பழக்க வழக்கங்களை உயர்த்தி மெருகேற்றுங்கள். அன்பாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அன்பால் உங்கள் முகம் பிரகாசம் அடையும். அன்பே உங்கள் முகத்துக்கு அழகைத்தரும்.

3.உங்களைச் சுற்றி வசீகர அலைகளைப் பரப்பவேண்டுமா? சிரியுங்கள். உங்கள் நண்பர்களுடன் இருக்கும்போது உங்கள் சிரித்த முகம் அவர்களை உங்கள்பக்கம் திருப்பும். உங்கள் மன அழகு உங்கள் உடல் அழகை விஞ்சும். உங்களை வசீகரமானவர்களாக மாற்றும்.

4.உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளுங்கள். உடல் சுகாதாரமாக இருந்தால்தான் உற்சாகமாக இருக்கமுடியும். உடலில் பொங்கும் வலிமையும், சக்தியும் உங்களை சோர்வில்லாமல் இருக்க வைக்கும். சோர்வில்லாமல் உற்சாகமாக இருக்கும் உங்களை எல்லோருக்கும் பிடிக்கும்.

5.உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்கள் குழுவிலிருந்து உங்களைத் தனித்துக் காட்டும். பாட்டு, டான்ஸ் போன்றவற்றில் இருப்பவர்கள் ஈர்ப்பின் மையமாக இருப்பதைப் பார்க்கிறோம். முகம் அழகானவர்களை விட திறமைசாலிகள் கொடிகட்டிப்பற்ப்பதை நாம் காண்கிறோமல்லவா!

6.உங்களிடம் இருக்கும் திறமைகளை வளர்த்துக்கொண்டீர்கள். அது உங்களைச் சுற்றியுள்ளோருக்குத் தெரியவேண்டுமே!! கல்லூரியில் நுழையும் முதல் வருடத்திலேயே திறமையை வெளிப்படுத்துபவர்களைச் சுற்றி ஒரு நட்புக்குழுவே உருவாகுவதை எல்லோரும் கண்டிருப்போம். திறமைகளைப் பூட்டி வைக்க வேண்டாம். உங்கள் அறிவு, திறமை ஆகியவற்றை உலக அழகிப்போட்டியில் கூட சோதிப்பதைக் கண்டிருப்பீர்கள்!

7.நோகடிக்கும், பிறரைக் குறை சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். எல்லோரிடமும் குறையிருக்கும். இதைப் பெரிது படுத்தாதீர்கள். பெருந்தமையாக பாராட்டிப் பேசும் உள்ளத்தை எல்லோருக்கும் பிடிக்குமே!!

8.உன்னால் முடியாது என்று சொல்லும் நபர்களைக் கண்டுகொள்ளாதீர்கள். திறம்பட செய்யமுடியும் என்ற நம்பிக்கை எண்ணமே உங்களைத் தனித்தன்மையுடன் காட்டும்.

9.உங்கள் உள்ளேயே ஒரு குரல் அவநம்பிக்கையை ஏற்படுத்தும். ஒவ்வொரு சிறந்த செயல்பாட்டையும் அது தடுத்துவிடும். தள்ளிப்போடும். முடங்கிப்போய் இருப்பவர்கள் அழகாகக் காட்சியளிக்க முடியாது.

10.பொறாமையை விட்டுத்தள்ளுங்கள். பிறருடைய திறமை, பணம், புகழ் ஆகியவற்றைப் பார்த்துப் பொறாமைப் படுவதைவிட உங்கள் வாழ்வை, செயல்களைத் திருப்திகரமாகச் செய்து பாருங்கள். உங்கள் உள்ளத்திருப்தி உங்கள் முகப் பொலிவைக் கூட்டிவிடும்.

11.உங்களுக்கே உங்களைப் பிடிக்காமல் இருக்கலாம். உங்களிடம் உங்களுக்குப் பிடிக்காத பட்டியல் நிறைய இருக்கும். அதையெல்லாம் புறந்தள்ளுங்கள். உங்கள் முக அமைப்பையோ, நிறத்தை,உயரத்தைப் பற்றியெல்லாம் படும் கவலைகளை விட்டொழியுங்கள். உங்களை நீங்கள் விரும்புவதே உங்களை அழகாக்கும்.12.குறைந்த அளவான மேக்கப், பற்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், நகங்கள், பாதங்களை சீராக வைத்துக்கொள்ளுதல், உடையில் கவனமாக இருத்தல், உடலில் மெல்லிய நல்ல நறுமணம் வீசும் வண்ணம் இருத்தல் ஆகியவை பொதுவாக அழகு சேர்க்கும் என்பது உங்களுக்கே தெரியும்.

சைவ சமையல்

வாங்க சட்னி வைக்கக் கத்துக்கலாம்




தோசை வார்க்கிறது எப்படின்னு சொன்னியே தொட்டுக்கச் சட்னி எப்படி வைக்கிறதுன்னு சொன்னியாடான்னு நம்ம சாப்பாட்டுல மயங்கின ரசிகர் பட்டாளம் மின்னஞ்சல், அலைபேசி அழைப்புகள்ல திட்டுனதுனால இப்போ சட்னி வைக்கிறது எப்படின்னு பார்க்கலாம். :)


தேவையானவை :

தேங்காய் - அரை மூடி
பொரிகடலை - 25 கிராம்
பச்சை மிளகாய் - 3/4
கடுகு - கொஞ்சம்
கறிவேப்பிலை - கொஞ்சம்
சீரகம் - கொஞ்சம்
உப்பு - கொஞ்சம்

செய்முறை :

1. தேங்காயை பத்தை பத்தையாக வெட்டி மிளகாய், பொரிகடலையுடன் மிக்ஸியில் மிருதுவாக அரைத்துக் கொள்ளவும்.

2. பின்னர் வாணலியில் கடுகு, கறிவேப்பிலை, சீரகம் போட்டு தாளிக்கவும்

3. தாளித்ததை தேங்காய கலவையுடன் சேர்த்துக் கொள்ளவும்.

4. தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்

5. கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொண்டால் சுவையான சட்னி தயார்.




தோசை வார்ப்பது எப்படி ?


அடடா நம்ம வலைப்பக்கம் வந்தே பல மாதங்கள் ஆகிப் போச்சே?? சரி கவலைப்படாமல் இன்னிக்கு தோசை வார்ப்பது எப்படின்னு பார்க்கலாம்.

1. முதல்ல நம்ம பதிவே பேச்சலர்களுக்கானது தான் எனவே தோசைமாவெல்லாம் நீங்களே ஆட்டுக்கல்லிலோ, கிரைண்டரிலோ அரைத்துக் கொள்ளுமாறு சொல்லமாட்டேன் :). ஒழுங்கா போய் கடையிலே 10 ரூபாய்க்கு மாவு வாங்கிக்கோங்க.

2. தோசைக்கல்லை அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள்.

3. ஒரு பெரிய வெங்காயத்தை நடுவாக்கில் இரண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இது எதுக்குன்னு கேட்கிறீங்களா? அவசரப்படாதீங்க.

4. தோசைக்கல் சூடானவுடன் அரைஸ்பூன் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயத்தால் தோசைக்கல் முழுவதும் பரவுமாறு தடவுங்கள். இப்போ புரிஞ்சதா வெங்காயம் எதுக்குன்னு?

5. குழிக்கரண்டியில் மாவை எடுத்து தோசைக்கல்லின் நடுவில் மாவை ஊற்றி மெதுவாக கரண்டியின் அடிப்பாகத்தால் மாவால் வட்டம் போடவும்.

6. பின்னர் தோசையின் மேலும் எண்ணெய் விடவும். வெந்தவுடன் தீயைக் குறைத்து தோசைக்கரண்டியால் திருப்பிப் போடவும். பின்னர் சட்னியுடன் தொட்டு சாப்பிட்டால் ஐயோ!!! ச்சே!! ஆஹா ... அமுதம். :)

தோசையின் மேல் வெங்காயம், இட்லிப்பொடி இப்படி என்னவேணாலும் தூவி வெங்காயதோசை, பொடிதோசை என சாப்பிட்டு ஜமாய்ங்க ..



வெண்டைக்காய் பொரியல்

நண்பர்களே! இன்னிக்கு நாம செய்யப் போறது வெண்டைக்காய் பொரியல்.



உயிரோட இருக்கும் போது





கொலை பண்ணினதுக்கப்புறம்



தேவையானவை :
வெண்டைக்காய் - 1/2 கிலோ
வெங்காயம் - பெரியது 1 / சிறியது 5,6
சிவப்பு மிளகாய் வத்தல் - 6,7
எண்ணெய் - 3 ஸ்பூன்
கடுகு - கொஞ்சம்
கறிவேப்பிலை - கொஞ்சம்
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
1. வெண்டைக்காயை சிறியதாக வட்ட வட்டமாக வெட்டிக் கொள்ளவும். வெங்காயத்தையும் எப்பவும் போல் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

2. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, மிளகாய் வத்தல், கறிவேப்பிலையை முதலில் போட்டு வதக்கிக் கொள்ளவும்.

3. பின் வெட்டிய வெண்டைக்காய், வெங்காயத்தை அதில் போட்டு வாணலியில் ஒட்ட விடாமல் நன்றாகக் கிளறி விட்டுக் கொண்டே இருக்கவேண்டும்.

4. பத்து நிமிடங்கள் நன்கு வதங்கியதும் அதில் உப்பையும் சேர்த்துக் கிளறவும்.

அவ்வளவுதான் சுடச்சுட வெண்டைக்காய் பொரியல் தயார்.

முன்யோசனைக் குறிப்புகள் :
1. வெண்டைக்காயை ஒரு மணி நேரம் முன்பே வெட்டி வெயில் சிறிது நேரம் வைத்து எடுத்த பின் வதக்கினால் பிசுபிசுவென்று ஒட்டாமல் வரும்.

2. காய் நறுக்கும் போது இரண்டு, மூன்று வெண்டைக்காய்களாக சேர்த்து வெட்டினால் நேரம் மிச்சமாகும்.

3. சமைப்பதற்கு முன் வெண்டைக்காய் நிறைய இருக்கும். ஆனால் வதக்கியபின் கொஞ்சமாக சுருங்கிவிடும். எனவே காய் வாங்கும் போதே இதை மனசில் வைத்துக் கொண்டு தேவையெனில் கொஞ்சம் சேர்த்தே வாங்கவும்.



கத்தரிக்காய் புளிக்குழம்பு


நண்பர்களே ! இன்னிக்கு எப்படி சுவையான புளிக் குழம்பு வைக்கிறதுன்னு பார்க்கலாம்.

தேவையானவை :
புளி - ஒரு எலுமிச்சை அளவு
தக்காளி - 3 நடுத்தர அளவு
வெங்காயம் - பெரியது 1 / சின்னது 10
குழம்பு மசாலா - 3 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3/4
கத்தரிக்காய் - 2/3
தேங்காய் - 3 பத்தை
கடுகு - கொஞ்சம்
கறிவேப்பிலை - கொஞ்சம்
உப்பு - கொஞ்சம்

செய்முறை :
1. முதலில் ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி புளியை ஊற வைத்துக் கொள்ளவும்

2. தக்காளி, வெங்காயம், மிளகாய், கத்தரிக்காய்களை நறுக்கிக் கொள்ளவும்

3. தேங்காயை மிக்ஸியில் மிருதுவாக அரைத்துக் கொள்ளவும்

4. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலையுடன் நறுக்கிய வெங்காயம், கத்தரிக்காய், மிளகாய் போட்டு வதக்கிக் கொள்ளவும்

5. தக்காளியையும் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்

6. புளியை நன்றாக நீரில் கரைத்து அந்தத் தண்ணீரை வதக்கிய கலவையுடன் சேர்க்கவும். புளிச்சக்கையை கீழே போட்டுடணும் பாஸு. குழம்பிலே போட்டுடாதீங்க ;)

7. குழம்பு மசாலாவை இந்தக் கலவையுடன் சேர்த்து கொஞ்சம் தண்ணீரும் சேர்த்துக் கொள்ளவும்.

8. அப்புறம் அரைத்த தேங்காயை குழம்புடன் சேர்த்து கொதிக்க விடவும். உப்பையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

அவ்வளவுதான் புளிக்குழம்பு தயார். சோறு, இட்லி, தோசைக்கு நன்றாக இருக்கும்.

குறிப்பு :
இதே போல கத்தரிக்காய்க்குப் பதில் வெண்டைக்காயையும் சேர்த்துப் புளிக்குழம்பு வைக்கலாம்.

குழம்பு மசாலாவுக்கு கடையில் கிடைக்கும் சக்தி அல்லது ஆச்சி குழம்பு மசாலா பயன்படுத்தலாம். வேலை எளிது.

படம் கிடைக்கலை. அதான் பச்சைக் கத்தரிக்காய் படம் போட்டிருக்கேன்


உப்புமா கிண்டுவது எப்படி?


நான் பதிவுல உப்புமா கிண்டுறது எப்படின்னு சொல்லலை. அதுக்க்கெல்லாம் கில்லாடிகள் நிறைய பேர் இருக்காங்க. இது வேற. சாப்பிட உப்புமா கிண்டுறது எப்படின்னு தான் சொல்லப் போறேன்

தேவையானவை :
ரவை - 1 சிறிய டம்ளர் (1 ஆளுக்கு)
பெரிய வெங்காயம் - 1ல் பாதி
மிளகாய் - 2
கடுகு, கறிவேப்பிலை, உப்பு - கொஞ்சம்

செய்முறை :
1. ரவையை வாணலியில் போட்டு கொஞ்சம் பொன்னிறமாக வரும்படி நன்றாக வறுத்துக் கொள்ளவும்.

2. வெங்காயம், மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.

3. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.

4. வதக்கிய வெங்காயத்துடன் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து லேசாகக் கொதிக்க விடவும். அப்படியே உப்பையும் சேர்த்துக் கொள்ளவும்.

5. பின் வறுத்த ரவையை அதில் சேர்த்து விடாமல் கிண்டவும்.

5 நிமிடம் கழித்துப் பார்த்தால் சுவையான உப்புமா தயார்.

குறிப்பு : ரவையை தண்ணீருடன் சேர்க்கும் போது காஞ்ச மாடு கம்புல விழுந்த மாதிரி தண்ணியைக் குடிக்கும். பயந்துறாதீங்க. ஒன்னும் ஆகாது. தீயைக் குறைத்து வைத்துவிட்டுக் கிண்டுங்கள். அய்யோ பாவம்னு கூடக் கொஞ்சம் தண்ணீர் சேர்த்தால் அப்புறம்  கெட்டி ஆகிரும். அனுபவம் உள்ளவன் சொல்றேன். கேட்டுக்கங்க.



எதற்கு இந்த வலைத்தளம்?


ஏற்கனவே ஏகப்பட்ட சமையல் வலைத்தளங்கள் இருக்கும்போது எதற்கு இந்த வீண்வேலை?
பேச்சிலர் சமையல் ஒன்னும் சுலபம் இல்லைங்க. காலையில் ஏழுமணிக்கு எழுந்திருச்சி அலுவலகம் 9 மணிக்கு போறதுக்குள்ள பல் விளக்கி, குளிச்சி அதுக்கப்புறம் சமையல் பண்ணி சாப்பிட்டு அலுவலகத்துக்கும் எடுத்துட்டுப் போறப்போ எப்படியெல்லாம் சுலபமாகவும், அதே சமயம் சுவையாகவும் சில எளிமையான, எப்பவும் கேள்விப்படுற உணவு வகைகளை செய்து சாப்பிட இந்தத் தளம் உதவும். இப்படியெல்லாம் சொல்லவும் ஆசைதான். முக்கியமாக பதிவெழுத எதுவும் சிக்காத போது சமையல் சாம்பார்னு ஒப்பேத்தவும் ஒரு வழி. ;). நமக்குத் தெரிஞ்சதைப் பகிர்ந்துக்குவோம்கிற எண்ணம் தான் காரணம்.

என்னவெல்லாம் எழுதப்போறீங்க?
சுடுதண்ணி வைக்கிறதில இருந்து சுண்டக்கஞ்சி காய்ச்சுறது வர சொல்லுவோம். எல்லோரும் சாப்பிடுற ஆனா சமைக்கத் தெரியாத சாம்பார்,ரசம்,கூட்டு,பொரியல் வைக்கிறது எப்படின்னு சொல்றதுதான் இந்த தளம்.

உண்மையிலேயே உபயோகமா இருக்குமா?
ஏன் இருக்காது? உங்க நண்பர்களுக்கு சமைச்சு போட்டு அவர்களை ஆம்புலன்சில் ஏத்தி ஆஸ்பத்திரிக்கு கொண்டு போற கடமை இருக்கே அநத பாக்கியம் உங்களுக்குக் கிடைக்க வேணாமா? நம்மளால நாலு டாக்டர் நல்லா இருந்தா என்ன சமையல பண்ணினாலும் தப்பில்லை.



சாம்பார் வைப்பது எப்படி?


முதலில் தமிழர்களின் தேசிய குழம்பான சாம்பார் வைப்பது எப்படின்னு பார்க்கலாம்.

முதலிலேயே சொல்லிடறேன் இது பேச்சிலர் சமையல் தளம். அது இது கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கும். சமாளிச்சிக்கோங்க. :)

தேவையான பொருட்கள் :
துவரம்பருப்பு - 200 கிராம் (4பேருக்கு)
தக்காளி - 3
வெங்காயம் - 2 பெரியது அல்லது 8 சிறியது
புளி - எலுமிச்சம்பழம் அளவு
சக்தி மசாலா சாம்பார் பொடி - 4 ஸ்பூன்
கடுகு, உளுந்தம்பருப்பு - 1/2 ஸ்பூன்
எண்ணெய், உப்பு, கருவேப்பிலை, கொத்தமல்லி - தேவையான அளவு

செய்முறை :
1. முதலில் பருப்பைக் கழுவி குக்கர் அல்லது பாத்திரத்தில் நன்கு வேகவைக்கவும். குக்கர் என்றால் இரு மடங்கு தண்ணீர் ஊற்றி 2 விசில் அடிக்கும் வரை அடுப்பில் வேகவைக்கவும். பாத்திரம் என்றால் கையில் எடுத்துப் பார்த்து பருப்பு வெந்துவிட்டதா எனப் பார்த்துக் கொள்ளவும். கை சுட்டுக்கும் எனவே சுட்ட கையை நல்ல குளிர்ந்த நீரில் கழுவவும்.

2. பருப்பு வேகும் நேரத்தில் புளியை ஒரு சிறிய பாத்திரத்தில் ஊறவைத்துக் கரைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.

3. பின்னர் வாணலியை(வானொலி அல்ல) அடுப்பில் வைத்து நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு, கருவேப்பிலை போட்டுத் தாளிக்கவும். பின்னர் அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். நன்கு வதங்கியதும் நறுக்கிய தக்காளியைப் போட்டு மீண்டும் வதக்கவும்.

4. தக்காளி நன்கு வதங்கியதும் அதில் சக்தி சாம்பார் பொடியைப் போட்டு மறுபடியும் வதக்கவும். தேவையெனில் கொஞ்சம் எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம்.

5. இப்போது அடுப்பில் தீயைக் குறைத்து வைத்துவிட்டு வேகவைத்த பருப்பையும், புளிக்கரைசலையும் வாணலியில் ஊற்றவும். பின்னர் தேவையான தண்ணீர் சேர்க்கவும்.

6. பின்னர் தேவையான அளவு உப்பைச் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

அவ்வளவுதான் கும்முன்னு சாம்பார் தயார். இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் எதற்கு வேண்டுமானாலும் ஊற்றிச் சாப்பிடுங்க.

குறிப்பு : சாம்பாரில் மேலும் முருங்கைக்காய், காரட் சேர்க்க வேண்டும் என்று நினைத்தால் துண்டுகளாக நறுக்கி பருப்புடன் சேர்த்து அவித்துக் கொள்ளவும். கத்தரிக்காய் சேர்க்க விரும்பினால் துண்டுகளாக நறுக்கி தக்காளியுடன் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்

தீபாவளி லேகியம்

தீபாவளியன்று ஏகப்பட்ட பட்சனங்களை செய்து, வயிறு புடைக்க சாப்பிட்டு முடித்த பின்னர் பட்டாசையம் கொளுத்தி கொண்டாடியாயிற்று. அடுத்து முக்கியமான ஒரு மேட்டர் உள்ளது. அதுதான் தீபாவளி லேகியம்.

சாப்பிட்ட இனிப்புகள் ஜீரணமாகி வயிறு பத்திரமாக இருக்க வேண்டுமல்லவா, அதற்குத்தான் இந்த தீபாவளி லேகியம்.

தீபாவளி லேகியம் என்றதும் பயந்து போய் விட வேண்டாம். சாதாரண இஞ்சி கஷாயம்தான் இது.

தீபாவளி லேகியம் தயாரிக்க தேவையான பொருட்கள்..

இளம் இஞ்சி - ஒரு பெரிய துண்டு.
மல்லி விதைகள் - 1 கப்.
ஜீரகம் - அரை கப்.
நெய் - 3 தேக்கரண்டி
வெல்லம் - 1 கப்.

செய்முறை:

கொத்தமல்லி விதைகளையும், ஜீராவையும், அரை குவளை தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். பின்னர் இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அதில், இந்த பேஸ்ட்டை கலந்து நன்கு நைசாக வருமாறு அரைத்துக் கொள்ளவும். பின்னர் இதில் வெல்லத்தை சேர்க்க வேண்டும். சேர்த்து கொதிக்க விடவும்.

பிறகு மெதுவாக நெய்யை கலந்து அப்படியே கலக்கி வரவும். இந்தக் கலவையில் உள்ள நீர் அனைத்தும் ஆவியாகி, அப்படியே இறுக்கமான பேஸ்ட் ஆக மாறி விடும். இதுதான் தீபாவளி லேகியம் அல்லது தீபாவளி மருந்து.

தீபாவளி பலகாரம் சாப்பிட்டு முடித்ததும் இந்த தீபாவளி மருந்தை உட்கொண்டால் வயிறு கெடாது, ஜீரணப் பிரச்சினை வராது.

தித்திப்பான தீபாவளிக்கு இந்த கஷாயம் அவசியம் தேவை. மறந்துடாம தயாரிச்சுடுங்க.

தேங்காய் சட்னி

தேவையான பொருட்கள்:

தேங்காய்: 1 மூடி

பச்சை மிளகாய்: 4

புளி: சுண்டைக்காய் அளவு

வெங்காயம்: 1

உடைத்த கடலை: சிறிதளவு

கடுகு: கால் தேக்கரண்டி

உப்பு: தேவையான அளவு

செய்முறை:

பச்சை மிளகாய், புளி, பெருங்காயம், உப்பு ஆகியவற்றை அரைத்து எடுத்துக் கொள்ளவும். இதனுடன் தேங்காய் துருவல், உடைத்த கடலையைப் போட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

பிறகு கடுகைத் தாளித்து அதில் கொட்டிவிடவும். இப்போது இட்லிக்கு தொட்டுச் சாப்பிட தேங்காய் சட்னி ரெடி.

தேங்காய் சாதம்


தேவையான பொருட்கள்:

1 கிலோ பச்சரிசி, ஒரு தேங்காய், ஒரு தேக்கரண்டி மிளகு, சிறிய துண்டு பெருங்காயம், 2 தேக்கரண்டி உளுந்து, 100 கிராம் முந்திரிப்பருப்ப, 8 காய்ந்த மிளகாய், 1 தேக்கரண்டி கடுகு, 100 மி.லி. நல்லெண்ணைய், தேவையான அளவு உப்பு, கொஞ்சம் கறிவேப்பிலை.

செய்முறை:

 பொல பொலவென்று சாதத்தை வடித்துக் கொள்ள வேண்டும். பின்பு அதை ஆற வைக்க வேண்டும். வாணலியில் கொஞ்சம் எண்ணைய் விட்டு, அதில் துறுவிய தேங்காயைப் போட்டு பொன் நிறத்திற்கு வறுத்துக் கொள்ளவேண்டும். பெருங்காயத்தை வறுத்து தூள் செய்து கொள்ள வேண்டும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, அதை காய விடவேண்டும். பின்பு கடுகைப் போடவும். கடுகு வெடித்ததும் அதில் மிளகு மற்றும் உளுந்து பருப்பை போடவும். பருப்பு சிவந்த நிறத்திற்கு வந்ததும் அதில் கறிவேப்பிலையைப் போட்டு பொரியும் தருணத்தில் இறக்கவும். ஆஆ வாணலியில் இருப்பதை ஆற வைத்த சாதத்தின் மேல் கொட்ட வேண்டும். தேங்காய், பெருங்காயப் பொடி ஆகியவற்றுடன் தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்கு கிளற வேண்டும். இப்போது தேங்காய் சாதம் சாப்பாட்டு மேஜைக்கு போக ரெடி.

வெஜிடபிள் பிரியாணி


தேவையான பொருட்கள்:
1 கிலோ அரிசி, ஒரு தேங்காய், 250 கிராம் வெங்காயம், 15 பச்சை மிளகாய், 200 கிராம் காலி பிளவர், 100 கிராம் பூண்டு, 1 கட்டு கொத்தமல்லி, 100 கிராம் உருளைக் கிழங்கு, இஞ்சி சிறுதுண்டு, தேவையான அளவு புதினா, 50 கிராம் கேரட், 50 கிராம் பீன்ஸ், 10 ஏலக்காய், 10 கிராம்பு, 100 கிராம் பட்டாணி, 100 கிராம் டால்டா, 1துண்டு இலவங்கம், 100 கிராம் நல்லெண்ணைய், தேவையான அளவு உப்பு, கால் தேக்கரண்டி கேசரிப் பவுடர்

செய்முறை:

 அரிசியை ஊறவைத்துக் கொள்ளவும். காய்களை ஒரே அளவாக வெட்டி வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், வெங்காயத்தை தட்டி எடுத்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, இலவங்கப் பட்டை ஆகியவற்றை மை போல் அரைத்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவி பால் எடுத்துக் கொள்ளவும். புதினா, கொத்தமல்லி இலைகளை பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

வாயகன்ற பெரிய பாத்திரத்தில் எண்ணையையும், டால்டாவையும் ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும். எண்ணைய் காய்ந்ததும் பட்டை, ஏலம், கிராம்பு ஆகியவற்றைத் தட்டிப் போடவும். அதனுடன் அரைத்த பூண்டு, இஞ்சி, பட்டையையும் போட்டுக் கிளறவும். இவை நன்கு வதங்கியதும் தட்டிய வெங்காயம், பச்சை மிளகாய், மல்லி இலை, புதினா ஆகியவற்றை போட்டு மேலும வதக்கவும்.

பின்னர் காய்கறி, கேசரிப் பவுடரைப் போட்டு வதக்கி, பிறகு தேங்காய்ப் பாலும், நீருமாக 2 லிட்டர் ஊற்றவும். தேங்காய்ப்பால் கொதித்ததும் அரிசியைப் போட்டு முக்கால் வேக்காட்டில் சூடேற்றவும். தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

பெங்காலி தம் ஆலு

தேவையான பொருட்கள்:
உருளைகிழங்கு - 1 கிலோ.
 மஞ்சள் பொடி 1- ஸ்பூன்.
எண்ணெய் - 1 குவளை.
பொடித்த ஏலக்காய், பட்டை, கிராம்பு , கொத்தமல்லி, கருவேப்பிலை - தேவையான அளவு.
மிளகு - 1 ஸ்பூன்.
தனியா - 1 ஸ்பூன்.
இஞ்சி - 1 ஸ்பூன்.
பூண்டு - 1 ஸ்பூன்.
மிளகாய் - 4

செய்முறை

உருளைக்கிழங்கைத் தவிர மற்ற அனைத்தையும் விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

உருளைகிழங்கை உப்பு, மஞ்சள் சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவேண்டும். பின்னர் தோலுரித்து குச்சியால் லேசாக துளை ஓட்டை போட வேண்டும்.

ஒரு தட்டில் இதை கொட்டி சிறிது மஞ்சள் போட்டு, சிறிது மிளகாய்ப் பொடி தூவி, தனியா, கிராம்பு, மிளகாய், இஞ்சி, பூண்டு அரைத்த விழுதை அதன் மீது கொட்டி பரப்ப வேண்டும்.

பின்னர் அடுப்பின் மீது வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்த பின் கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து உருளைகிழங்கு போடவேண்டும்.

கிழங்கு மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவேண்டும். நன்றாக கொதித்ததும், ஏலக்காய் தூள் மற்றும் கொத்தமல்லி தூவி இறக்கினால் பெங்காலி தமி ஆலு தயார்.

இதை சப்பாத்தி, சாதம் எல்லாவற்றுடனும் பரிமாறலாம்.

சொஜ்ஜி அப்பம்

தேவையான பொருட்கள்:

தேங்காய் விழுது (அரைத்தது) - 2 டம்பளர்கள்.

சர்க்கரை பாகு - ஒன்னேகால் டம்பளர்.

மைதா மாவு - 4 டம்பளர்கள்.

செய்முறை:

சர்க்கரைப் பாகில் தேங்காய் விழுதை சேர்க்கவும். அதை கெட்டியாக கிளறவும். சூடு ஆறிய பின்னர் உருண்டைகளாக செய்து, பூரி போல் இட்ட மைதாவிற்குள் பூரணமாக வைத்து எண்ணையில் போட்டு பொரித்து எடுக்கவும்.

அட்டகாசமான சொஜ்ஜி அப்பம் ரெடி!

ருச் பஞ்சமி மசாலா


தேவையான பொருட்கள்:
வெண்டைகாய் கால் கிலோ.
பூசணைகாய் கால் கிலோ.
சுரைக்காய் கால் கிலோ.
புடலங்காய் கால் கி.
வெள்ளரிக்காய் கால் கிலோ
பாலக்கீரை சிறிதளவு
பச்சை மிளகாய் 5
வெங்காயம் 2
தேங்காய் சிறிதளவு
கொத்துமல்லி, கறிவேப்பிலை
இஞ்சி, பூண்டு சிறிதளவு

செய்முறை:

முதலில் காய்களை சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். மிளகாய், இஞ்சி, பூண்டை விழுதாக அரைத்து கொள்ள வேண்டும். தேங்காயை துருவிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு, சீரகம் போட்டு தாளித்து, அரைத்த இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து உப்பு போடவும்.

சிறிது கொதித்த பின் நறுக்கிய காய்கறிகளை அதில் சேர்க்கவும். வெங்காயம், கொத்தமல்லியுடன் கரம் மசாலாவையும் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். ஆறிய பின் பரிமாறவும். இது சத்தான வைட்டமின் உணவாகும்.

வாழைப்பூ கிரேவி


தேவையான பொருட்கள்:
வாழைப்பூ - 1
சின்ன வெங்காயம் -5
காய்ந்த மிளகாய் - 5
பூண்டு - 5
புளி - சிறிதளவு
மஞ்சள் தூள், சீரகம், கரம் மசாலா,
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை:

முதலில் வாழைப்பூவை நரம்பு நீக்கி பொடியாக நறுக்கவும்.பிறகு சிறிய பாத்திரத்தில் தனியாக புளியை போட்டு அதில் 1 டம்ளர் தண்ணீரில் கெட்டியாக கரைத்து வைக்கவும்.

மிளகாய், சீரகம், பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைக்கவும்.வெங்காயத்தை நன்கு பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் புளி கரைத்த தண்ணீரில் வாழைப்பூ, நசுக்கிய வெங்காயம், அரைத்த விழுது, உப்பு, மஞ்சள் தூள், கறிவேப்பிலை, நல்லெண்ணெய் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

இதில், சிறிது கரம் மசாலாவை சேர்க்கவும். எண்ணெய் பிரியும் வரை கொதிக்க வைத்து இறக்கவும்.

பிறகு, வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து, அதனுடன் சேர்க்கவும். இதன் மீது கொத்தமல்லியை நறுக்கி தூவி விடவேண்டும்.

காய்கறி உப்புமா

தேவையான பொருட்கள்:

ரவை 1 கப்
பெரிய வெங்காயம் 2
கேரட் நறுக்கியது 1 கப்
தக்காளி 2
பச்சை மிளகாய் 5
பீன்ஸ் நறுக்கியது 1 கப்
பச்சை பட்டாணி அரை கப்
முந்திரி பருப்பு
எலுமிச்சை சாறு சிறிதளவு
லவங்கம், பட்டை, மஞ்சள் தூள்
கொத்துமல்லி, கறிவேப்பிலை
டால்டா அல்லது வெண்ணெய்

செய்முறை:

முதலில் நறுக்கிய கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணியை நன்றாக அவித்து எடுத்து கொள்ளவும்.

வாணலியில் வெண்ணெய் ஊற்றி முந்திரி பருப்பை நன்றாக சிவக்க வறுக்கவும். பிறகு அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். அதில் நறுக்கிய வெங்காயம், மிளகாய் ஆகியவற்றை கொட்டி நன்றாக வதக்கவும்.

இதனுடன் அவித்த காய்கறிகளை சேர்த்து நன்றாக வேக வைக்கவும். பின்னர் தக்காளி, லவங்கம், கரம் மசாலா, பட்டையை சேர்க்கவும். 2 நிமிடம் வேக விடவும்.

தனியாக ஒரு பாத்திரத்தில் நீரை கொதிக்க வைத்து இதில் ஊற்றி உப்பு போடவும்.

பின்னர் ரவையை சிறிது சிறிதாக கொட்டி நன்றாக கலக்கவும். நன்றாக திரண்டு கெட்டியாக வந்தவுடன் மீதமிருக்கும் கொத்தமல்லி, எலுமிச்சை சாறு கலந்து ஆறவிடவும்.

மாம்பழம் அல்லது தேங்காய் சட்னியுடன் பரிமாற சுவையான வெஜிடபிள் உப்புமா ரெடி.

மாங்காய் புளியோதரை

தேவையான பொருட்கள்:
அரிசி 2 கப்
மாங்காய் 2
அவல் 1 கப்
வெங்காயம் 2
மிளகாய் 5
கறிவேப்பிலை, கொத்தமல்லி
இஞ்சி சிறிதளவு
மஞ்சள் பொடி
கரம் மசாலா
எலுமிச்சை சாறு

செய்முறை

முதலில் அரிசியை வேகவைத்து எடுத்து கொள்ளவும். மாங்காய் தோலை சீவி விட்டு, நன்றாக துருவி வைத்துகொள்ளவேண்டும். இஞ்சியையும், வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

பின்னர் வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், கறிவேப்பிலை, நறுக்கப்பட்ட இஞ்சி, மிளகாய் ஆகியவற்றை வதக்கவும். இத்துடன் அவலை கொட்டி நன்றாக கிளறவும்.

இந்த கலவையுடன் மாங்காய் துருவலை கொட்டி கலக்கவும். தேவையான அளவு உப்பு போடவும். இத்துடன் சிறிதளவு மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்க்கவும். பிறகு சாதத்தை இத்துடன் கலந்து, எலுமிச்சை சாறு விடவும்.

சிறிது நேரம் கழித்து பரிமாறவும்.

காளான் மசாலா

தேவையான பொருட்கள்:
காளான் - 2 கப்
தேங்காய் துருவல் - 1 கப்
வெங்காயம் - 2
மிளகாய் - 5
மிளகு, தனியா, இலவங்கப்பட்டை, இலவங்கம், மஞ்சள் தூள்,பூண்டு,கொத்துமல்லி - தேவையான அளவு.

செய்முறை

முதலில் காளானை சிறுசிறு துண்டுகளாக வெட்டி, வெந்நீரில் போட்டு நன்றாக வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்றாக பொன்னிறமாகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.

சிறிது எண்ணெயில் இலவங்கம், பட்டை, தனியா, மிளகு, பூண்டு, மிளகாய் போட்டு வதக்கவும். தேங்காய் துருவலை தனியாக வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் மசாலாக்களை நன்றாக விழுதாக அரைத்து கொள்ளவும். இத்துடன் வேக வைத்த காளானை நன்றாக கலக்க வேண்டும். வெங்காயத்தையும், தேங்காய் விழுதையும் சேர்க்கவும்.

பிறகு 5 நிமிடம் சிறிது நேரம் கொதிக்கவிடவும். இதன் மேல் கொத்தமல்லி தூவி, சப்பாத்தி, பிரெட், சாதம் ஆகியவற்றுடன் பரிமாற சுவையாக இருக்கும்.

மிக்ஸட் வெஜிட்டபிள் தால்

தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு - 2 கப்.
பச்சை பட்டாணி - 1 கப்.
காலி ப்ளவர் - 1.
கேரட் - 2.
சிகப்பு முள்ளங்கி - 1.
பூசணி - 1 கீற்று.
சுரைக்காய் - 1 கீற்று.
வெள்ளரிக்காய் - 2.
பச்சை மிளகாய் - 4.
இஞ்சி - சிறிது.
கொத்தமல்லி - சிறிது.
பெருங்கயத்தூள் - சிறிது.
சீரகம் - 1 ஸ்பூன்.
மஞ்சள் தூள் - சிறிது.
எலுமிச்சை சாறு - சிறிது.

செய்முறை:

முதலில் எல்லா காய்களையும் நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும். கொத்தமல்லி, இஞ்சி ஆகிய இரண்டையும் நன்றாக அரைத்து கொள்ளவும்.

வாணலியில் பாசிப் பருப்பை நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும். பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.

அதன் பின்னர் பெரிய கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, சீரகம் போடவும், பிறகு மிளகாய், அரைத்த இஞ்சி விழுதை போட்டு வதக்கவும்.

சிறிது நேரம் கழித்து நறுக்கிய காய்கறி மற்றும் பாசிப் பருப்பை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். அப்படியே விட்டு விடாமல், மெதுவாக கிளறி விட்டு வரவும். இல்லாவிட்டால் அடி பிடித்துக் கொள்ளும்.

கடைசியாக சிறிது எலுமிச்சை சாறு விட்டு கொத்தமல்லியை போட்டு மூடி வைக்கவும்.

ஆறிய பின்னர் எடுத்து பரிமாறினால் சுவையான மிக்ஸ்டு வெஜிடபிள் தால் ரெடி.

கருத்துகள் இல்லை: